தேவனால் பிறந்தவன் யார்? - வேதத்திலிருந்து
தேவன் மனுக்குலத்திற்க்கென்று (இரட்சிபிற்க்காக அல்லது பாவமன்னிப்பிற்காக) அனுப்பிய அல்லது தேவனால் அனுப்பப்பட்ட இயேசுவை அவர் யாரென்று விசுவாசிப்பதே தேவனால் பிறப்பதின் ஆரம்பம்.
தேவனால் பிறப்பது - வேத வரையறை 1யோவான் 5:1
எவன் ஒருவன் இயேசுவை கிறிஸ்து என்று விவாசிக்கிறானோ அவனே தேவனால் பிறந்தவன் என்று வேதத்தில் 1யோவான் 5:1 ல் வாசிக்கிறோம். ஏன் அந்த நிருபத்தை ஆக்கியோன் அவ்வண்ணம் எழுதுகிறார்!!!
இயேசு கிறிஸ்துவும் - மதத் தலைவர் நிகோதேமுவும் உரையாடல் யோவான் 3:1-10
பரிசுத்த ஆவியானவர் யோவான் மூலமாக எழுதிய சுவிஷேசத்தை நாம் இப்பொழுது கவனிப்போமாகில், 3ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய தலைவர், நியாயபிரமான போதகர் (அதிகாரி, பரிசேயன்) நிக்கோதேமு என்பவர் தம்மை சார்ந்தவர்களின் பிரதிநிதியாக இரவிலே ஏசுவிடத்தில் வந்து; ரபீ நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்றும், ஒருவனும் தன்னிடத்தில் தேவன் இராவிட்டால் இப்படிப்பட்ட அற்புதங்களை செய்யமாட்டான் என்றும் கூறினார்.
உடனடியாக கிறிஸ்து இயேசு அவருக்கு பிரதியுத்தரமாக சொன்ன பதில் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காண மாட்டான்” என்றார். ஆனால் அந்த தலைவரும் போதகருமான அவருக்கோ அதை புரிந்து கொள்ளும் மனபக்குவமோ அல்லது திறனோ காணப்படவில்லை.
அவர் மீண்டும் தன்னுடைய மறுபடியும் பிறக்காத உள்ளான மனித நிலையில் சிந்திக்க ஆரம்பிக்கிறார்.
1) முதிர் வயதாயிருக்கிற ஒருவன் எப்படி மீண்டும் பிறக்கக்கூடும்
2) ஒரு முறை தாயின் வயிற்றில் பிறந்தவன் எப்படி மீண்டும் தன் தாயின் வயிற்றில் சென்று கர்ப்பத்தில் பிறக்கக் கூடும்
இயேசு கிறிஸ்து மறுபடியும் இரண்டாம் முறை அவனை நோக்கி மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறார்; “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்” என்று சொல்லி; மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும் ; ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும் என்று முடிக்கிறார்.
இன்றைக்கும் ஆவிக்குறியவர்கள் என்று சொல்லுபவர்களின் வட்டாரத்தில் நாம் சண்டையை காண்கிறோம். முழுகுவதா அல்லது தெளிப்பதா என்று, எதனால் மனிதன் மறுபடியும் பிறக்கிறான் என்று இன்னும் அறிவு வரவில்லை.
குருடனுக்கு வழி காட்டுகிற குருடர்கள் தான் இன்று அதிகமாக தங்களை ஆவிக்குரியவர்கள் என்று சொல்லி மற்ற கிறிஸ்துவினால் அழைப்பை பெற்ற தேவ பிள்ளைகளை, இயேசுவை துன்பப்படுதினதுபோல் துன்பப்படுத்துகிறார்கள்.
குறிப்பு: இங்கே இயேசு கிறிஸ்து இவரை கடிந்து கொள்கிறார் ஏனென்றால் நிக்கொதேமு அவரை "தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசியாதபடி"; இயேசுவை நோக்கி ரபீ நீர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்கிறார், தேவன் உம்மிடத்தில் இல்லாவிடில் இவ்விதமாக பெரிய அற்புதங்களை செய்ய இயலாது என்றும் கூறுகிறார், இன்றைய ஆவிக்குரிய தலைவர்கள் கூறுவது போல. இயேசுவை வேத எழுத்தின் படியும், தீர்க்கதரிசனத்தின் படியும் கிறிஸ்து என்றும் தேவன் என்றும் வாக்குத்தம் பண்ணப்பட்ட மேசியா என்றும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ள முடியாதபடி கண் சொருகிப்போன நியாயப்பிரமான போதகராய் இருக்கிறார். இரண்டாவதாக மனுஷ பயத்தினால் (கண்ணி) மற்ற தலைவர்கள் அறியாதபடி இரகசியமாக இரவிலே இயேசுவை சந்திக்க வந்தவர், இயேசுவை கிறிஸ்து என்றும் தேவனென்றும் பகிரங்கமாகவும் வெளியரங்கமாகவும் அறிக்கையிடுவதிலேயே தேவன் மிகவும் பிரியமாய் இருக்கிறார். Ref
இயேசு கிறிஸ்துவும் - அப்போஸ்தலர்களும் உரையாடல் மத்தேயு 16:13-17
மேலும், புதிய உடன்படிக்கையின் பிரதான ஊழியர்களும், அப்போஸ்தலர் என்பவர்களையும் கூட்டிச்சேர்த்து (ஓரிரு வருட ஊழியங்களுக்குப்பின் அதாவது தம் கூடவே அவர்களை வைத்து தம்மை வெளிப்படுத்திய பின்னர்) தம்மை யார் என்று அவர்களிடம் வினவ, ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்ல; இறுதியில் பிரதான அப்போஸ்தலர் பேதுருவை கேட்க அவர் இயேசுவை நோக்கி நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சொலுகிறார். மத்தேயு 16:13-17 வரை
அதற்கு பிரதியுத்தரமாக இயேசு பேதுருவை நோக்கி,
முதலாவதாக யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான் என்று சொல்லுகிறார். அவனை ஆசீர்வதிக்கிறார்.
இரண்டாவதாக, மாமிசமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை என்கிறார்.
கடைசியாகவும் இறுதியாகவும், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்று உறுதியாக கூறுகின்றார்.
அப்படியானால் தேவனால் பிறப்பது, மறு பிறப்பு, இரண்டாம் பிறப்பு, ஆவியின் பிறப்பு இவைகளெல்லாம் தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவை (இயேசுவை கிறிஸ்து என்று) மக்களுக்கு வெளிப்படுத்துவதாகும்.
இயேசு கிறிஸ்து "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான்" என்று சொல்லுகிறார் - யோவான் 6:44ல். அது மாத்திரமல்ல "பிதாவானவர் எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறதில்லை" என்றும் யோவான் 6:37 ல் கூறுகின்றார்.
இயேசு கிறிஸ்து "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" என்று யோவான் 8:24 ல் சொன்ன கூற்றை சற்று பார்போமா!
ஜனங்கள் அவரை இயேசு (தச்சனின் மகான், மரியாளின் மகன்) என்று ஏற்றுக் கொள்ளுகிறார்கள், விசுவாசிக்கவும் செய்கிறார்கள். ஒரு கூட்டம் அவரை பெரிய தீர்க்கதரிசி என்றும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள் அவர் செய்த அற்புத அடையளங்களினால்.
பிரச்சினை என்ன என்றால், அவரை அது வரை வெளிப்படுத்தப்பட்டுள்ள வேத வாக்கியத்தின் படியும், அவர்கள் மிகவும் ஆவலாய் எதிர் நோக்கி இருந்த மேசியாவாகிய கிறிஸ்து என்றும் விசுவாசிப்பதிலும்தான்
.....வளரும்